16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை: வெள்ளக்காடானது ஒகேனக்கல்
சென்னை: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றாலும், சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன.
பருவ மழைக்காலத்தில் போதுமான மழை பெய்யவில்லை என்றால் இந்த ஏரிகள் நிரம்பாமல் சென்னை மக்கள் குடிநீருக்கு அல்லாட வேண்டியிருக்கும்.
நடப்பாண்டில் பருவமழை நன்றாகப் பெய்துள்ளதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 விழுக்காடு நிரம்பி உள்ளன.
பூண்டி ஏரியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, அந்த ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் இரு ஏரிகளும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.
மேலும், கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை நீடித்து வருவதால் சென்னையைச் சுற்றிஉள்ள ஏரிகளுக்கு கூடுதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் 3.645 டிஎம்சி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3.292 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
சோழவரம் ஏரியில் வெறும் 132 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவு ஐநூறு மில்லியன் கனஅடியாகும். இந்த ஏரியும் முழுமையாக நிரம்பி உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சி ஆகும். இதில் 2.994 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக 201 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இதற்கிடையே, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அதி தீவிர கனமழையும் 13 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் ஓசூரில் ஆக அதிகமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பத்துார், தாளவாடி 9 சென்டிமீட்டர், கிருஷ்ணகிரியில் 7 செமீ மழையும் பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளக்காடான ஒகேனக்கல்
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது என்றும் இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு வெள்ளக்காடாக மாறி, அங்குள்ள அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
இதன் எதிரொலியாக கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதியில் குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மேலும், கர்நாடகா அணைகளில் இருந்து 2.12 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அதுவும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதையடுத்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அணை நிரம்பியதை அடுத்து, அதில் இருந்து 2,520 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

