கொச்சி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரைஆற்றினார்.
தமது உரையில், "விக்ராந்த் கப்பல் ஒரு இயந்திரம் அல்ல. இது இந்தியாவின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் நற்சான்று; நாட்டிற்கும் கடற்படைக்கும் கிடைத்த பெருமை," என்றார் அவர். எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு இருப்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.
"ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலை ஒரு மிதக்கும் விமான நிலையம் அல்லது மிதக்கும் நகரம் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தக் கப்பலில் அதிநவீன வசதிகள் உள்ளன," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
கப்பலில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் இருப்பதாகக் கூறிய பிரதமர், இதன்மூலம் 5,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கமுடியும் என்று தெரிவித்தார்.
இவ்வேளையில் இந்தியக் கடற்படையின் கொடி மாற்றப்பட்டு புதிய கொடி இன்று பிரதமரால் வெளியிடப்பட்டது. புதிய கொடியில் மாமன்னர் சிவாஜியின் இலச்சினை இடம்பெறுவதாகக் கூறிய அவர், பழைய கொடியை மாற்றுவதற்கு உந்துசக்தியாக விளங்கிய மாமன்னர் சிவாஜிக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கப்பல் 20,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

