கல்லூரிப் படிப்பைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி நிதியுதவி 'புதுமைப் பெண்' திட்டம் தொடக்கம்: கெஜ்ரிவால் புகழாரம்

2 mins read
b453d081-116c-4141-98ca-385a5c882ade
ஆசிரியர் தினமான நேற்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியைப் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆசிரியர் தினத்தில் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மாணவிகளுக்கு உடனடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

இத்திட்டத்துக்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த 'புதுமைப் பெண்' திட்டத் தொடக்க விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

"புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதி கரிக்கும். குழந்தை திருமணங்கள் குறைந்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதி கரிக்கும்.

"திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. இதனை தடுக்கவே ரூ.1,000 வழங்கப்படு கிறது. இது இலவசம் அல்ல; அரசின் கடமை," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் அடங்கிப் போகத் தேவையில்லை. படித்துவிட்டு தங்கள் சொந்தக் கால்களில் நிற்க லாம். நன்றாகப் படிக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பின் வீட்டிற்குள் முடங்குவது மாறவேண்டும்.

"மாணவர்களை வளர்த்தெடுக் கவே நானும் அரசும் உள்ளோம். இதனை ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வுடன் கூறுகிறேன்," என்று பேசினார்.

இவ்விழாவில், சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

"இந்த 'புதுமைப்பெண்' திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக விளங்கப் போகிறது," என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இத்திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், "பலர் வறுமையால் உயர் கல்வியைத் தொடரமுடியாத சூழல் உள்ளது. நாட்டில் 27 கோடி பேர் பள்ளி செல்கின்றனர். அவர்களில் 66% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள்," எனத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, மேல் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நேற்று நடப்புக்கு வந்தது.