கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் 2 ரூபாய்க்கு இட்லியும் 3 ரூபாய்க்கு தோசையும் விற்பனை செய்யப்படுவது தமிழக மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த இட்லி, தோசைக் கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையைச் சாப்பிட்டுச் செல்கின்றனர்.
"இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தோசைக் கடைகள் உள்ளன. குறைந்த விலைக்கு இட்லி, தோசை வார்த்து விற்பதில் இங்கு போட்டி நிலவுகிறது. ரூ.2, ரூ.3 இட்லி, தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. ஒரு சிறிய குடும்பம் ரூ.25ல் காலை உணவை நிறைவு செய்யலாம்," என்கின்றனர் ஏ.புனவாசல் கிராம மக்கள்.
மதுரை, சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட நகரங்களில் ஒரு இட்லி ரூ.10க்கும் ஒரு தோசை ரூ.40க்கும் விற்கப்பட்டும் நிலையில், ஏ.புனவாசல், கோவிலாங்குளம் இட்லி, தோசைகள் தரம், சுவையுடன் விலை குறைத்து விற்கப்படுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.