சென்னை: தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு திராவிட வழி ஆட்சிதான் காரணம் என்றார்.
"தமிழகத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியமாகும்.
"அதேபோல, மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்," என்றார் அமைச்சர் பொன்முடி.
புதுமைப் பெண் திட்டம், 7.5% இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிர்க்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் அந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
"தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.
"தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சிடம் எழுத்துபூர்வமான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்," என்றார் அமைச்சர் பொன்முடி.