கிருஷ்ணகிரி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கனமழை நீடித்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
தென்பெண்ணை, வைகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோரம் வசிக்கும் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 71 அடி உயரமுள்ள வைகை அணையில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சில குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றிலும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. ஆம்பூர் அருகே பச்சக்குப்பம் பகுதியில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை, காவல்துறையினர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரி எனும் படேதாள ஏரி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேள, தாளங்கள் முழங்க தெப்பத் தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏரிக் கரையில் வைத்து ஐந்து ஆடுகளைப் பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரியில் 80% நீர்நிலைகள் நிரம்பி இருப்பதால் அனைத்து கிராமங்களிலும் இதேபோன்ற மகிழ்ச்சி அலை நிலவி வருகிறது.

