சென்னை விமான நிலையத்திலிருந்து 20 கிலோ தங்கம் ஆட்டோவில் கடத்தல்

1 mins read
764f2e07-66a0-47e1-8fbf-82f54a464a2e
கோப்புப்படம் -

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து 13 பெட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த ஆசாமிகளைக் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகக் காவல் துறையினர் இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகை சந்திப்பு அருகிலும் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த ஆட்டோவை காவல் துறையினர் மடக்கி சோதனை இட்டனர்.

அதில் அடுக்கி வைக்கப்பட்ட 13 பெட்டிகளில் 20 கிலோ தங்கம் செப்பை விமான நிலையத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டோவையும், ஆட்டோவில் வந்த 2 பேரையும் எழும்பூர் காவல் நிலையத்துக்கு காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் ஆட்டோவில் தங்கத்தை கடத்தி வந்த ஒருவரது பெயர் பரத்லால், இன்னொருவர் ராகுல் என்றும் ராஜஸ்தானை சேர்ந்த இருவரும் சென்னையில் தங்கி இருந்து பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மும்பையில் இருந்து விமானத்தில் பார்சல் வடிவில் 20 கிலோ தங்கமும் கடத்தி வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள பார்சல் நிறுவனத்துக்கு பரத்லாலும், ராகுலும் தங்கத்தை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பார்சல் நிறுவன உரிமையாளரான குல்தீப் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.