சென்னை: குடும்பத்தார் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திடீரென தெரிவித்ததுடன் முடிந்தால் அந்தத் திருமணத்தை தடுத்துப் பார் என்று சவால் விட்ட காதலிக்கு அதிர்ச்சி அளித்தார் காதலர்.
சென்னையைச் சேர்ந்த 25 வயதான சதீஷ்குமார் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணுக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென காதலிக்குத் திருமணம் நிச்சயமான தகவலை அறிந்து சதீஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காதலியிடம் அவர் விசாரித்தபோது, பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக காதலி திட்டவட்டமாகக் கூறினார்.
இதனால் சதீஷ்குமார் கோபமடைய, "முடிந்தால் எங்கள் திருமணத்தை தடுத்துப்பார்" என்று இளம்பெண் சவால்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணுக்கு தண்டையார் பேட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு சதீஷ்குமாரும் வந்திருப்பதைக் கண்டு அவரது காதலி அதிர்ச்சி அடைந்தார். எனினும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் மணமேடையில் மணமகனுடன் அமர்ந்திருந்தார்.
திருமணச் சடங்குகள் நடைபெற்று, இறுதியில் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென மணமேடைக்கு வந்த சதீஷ்குமார், சினிமா பட பாணியில் மணமகன் கையில் இருந்த தாலியைத் தட்டிப்பறித்தார்.
பிறகு காதலியின் கழுத்தில் அதைக் கட்ட முயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மணமக்களின் குடும்பத்தாரால் சரமாரியாகத் தாக்கப்பட்ட அவர், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து மணமக்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் காதலி சவால் விடுத்ததால், திருமண மண்டபத்தில் தாம் அத்துமீறியதாக சதீஷ்குமார் கூறினார்.
அதைக் கேட்ட மணமகன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். மேலும், திருமணத்துக்காக தாங்கள் செய்துள்ள செலவுகளை மணமகள் குடும்பத்தார் ஈடுகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சதீஷ்குமாரை திருமணம் செய்துகொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்திய போதிலும், இளம்பெண் அதற்கு மறுத்துவிட்டார். பிறகு மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.