சென்னை: சென்னையில் போரூர், வடபழனி, அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளில் கை, கால்களில் போலியாக கட்டு கட்டிக்கொண்டு, தங்களது இயலாமையைக் கூறி யாசகம் கேட்போர் வேடத்தில் இருந்த 20 திருடர்களைச் சென்னை காவலர்கள் கைது செய்தனர்.
இந்த பிச்சைக்காரர்கள் காலை நேரத்தில் மட்டுமே கட்டு கட்டிக் கொண்டிருப்பதாகவும் இரவு நேரங் களில் கட்டை பிரித்துவிட்டு நடந்து செல்வதாகவும் சிலர் கூறினர்.
திருட்டு வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களைப் பிடிக்க குழு அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
போரூர் சமிக்ஞையில் யாசகர் வேடத்தில் கால்களில் கட்டுகளுடன் தாங்கி தாங்கி வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவருக்கு காயம் ஏதுமில்லை என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது உறவினர்கள் 20 பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் போலியாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். காலையில் பிச்சை எடுக்கும் தொழிலிலும் இரவில் திருட்டுத் தொழிலிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனிடையே, சாலைகளில் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களை முழுமையாக களை எடுக்கவேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தமிழக காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

