மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமமக்கள் ஒரு வாரமாகியும் வீடுகளுக்குச் செல்லமுடியாமல் முகாம்களில் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள நாதன்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், தொற்றுநோய்கள் ஏற்படும் சூழல் உள்ளதால் கரையோரம் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாக, காவிரி, வைகை, பவானி, தாமிரபரணி போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அவற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அந்தியூர் அருகே பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 457 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.