செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ede6a49d-036a-4318-9380-6c17135e7265
-

ரூ.7 கோடி செலவில்

நீர்நிலைகள் சீரமைப்பு

சென்னை: தமிழகத்தில் 40,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரின் ஆதாரமாக உள்ள இந்த நீர் நிலைகள், நகர்ப்புற வளர்ச்சிக்கான ஆக்கிரமிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக ஈர நிலங்கள் ஆணையம், இந்த நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.7 கோடி செலவில் 100 நீர் நிலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணியில் அரசுத் துறைகள் மட்டுமன்றி தன்னார்வ அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுடு மண்ணால் தயாரிக்கப்பட்ட தொங்கட்டான் கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விஜயகரிசல்குளம் அகழாய்வில் பெண்கள் அணியும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், இதற்குமுன் தங்கத்தால் ஆன அணிகலன் இங்கு கிடைத்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள காதணி மூலம், நமது முன்னோர் அலங்காரத்திற்கும் அணிகலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றார்.

அசிங்கமாகத் திட்ட 50 பேரை பணியில் அமர்த்திய கும்பல் கைது

சென்னை: கைபேசி செயலி மூலம் கடன்பெற்றவர்களிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டிய புகாரின் கீழ், நான்கு பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், அவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஆபாசமாக திட்டவும் 'மார்பிங்' புகைப்படங்களை அனுப்பவும் தனியாக 50 பேரை வேலைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சம்பளமின்றி தவிக்கும் 14 தமிழர்கள்

மாலத்தீவில் உள்ள ஹுலு மாலியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த 17 பேருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் முறையாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இவர்களில் 14 பேர் தமிழகத்தையும் மூவர் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள். அந்த கட்டுமான நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த 17 பேரும் தாயகம் திரும்ப முடிவெடுத்து உள்ளனர். தற்போது இந்திய தூதரகத்தின் உதவியுடன் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. படம்: ஊடகம்

வைகோ ஆவணப்படம் வெளியீடு

சென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.