சென்னை: அனைத்துத் துறைகளும் தமிழகத்தில் நல்ல வளர்ச்சி காணவேண்டும் என்பதே மாநில அரசின் முக்கிய நோக்கமாக உள்ளதாகக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குறிப்பாக, சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
உலகமே வியந்து பார்க்கும் வகையில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அடுத்ததாக டென்னிஸ் போட்டி என அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அனைத்துலகப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்துலக, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், பதக்கங்களை வென்ற 1,130 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 16 கோடியே 28 லட்சத்து 25,000 ரூபாய்க்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதன்பின்னர் பேசிய முதல்வர், "விளையாட்டுத் துறையில் தமிழகம் முதன்மை பெறவேண்டும். பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும்," என்று விளையாட்டு வீரர்ககளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி, ஜல்லிக்கட்டு ஆகிய போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய முதல்வர், அரசின் சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது எனக் கூறினார்.

