மலைப்பாதையில் பேருந்து-லாரி மோதியதில் 49 பேர் உயிர்தப்பினர்
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த தொப்பூர் மலைப்பாதையில் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பேருந்துப் பயணிகள் 49 பேரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். லாரியின் ஓட்டுநர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அவர்களை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பிவைத்தனர்.
'கல்விச் செலவை அரசே ஏற்கும்'
சென்னை: முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து 28 நாள்கள் கழித்து வீடு திரும்பினார் சிறுமி தான்யா. அவரது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சிறுமி தான்யாவை வரவேற்ற பள்ளி மாணவர்கள், ரோஜா மலர் கொடுத்து அன்பை பகிர்ந்துகொண்டனர்.
இந்தச் சிகிச்சைக்கு முன்பாக, "என் முகம் கோணலாக உள்ளதால் யாரும் என்னுடன் பேச விரும்புவதில்லை. விளையாடவும் மறுக்கிறார்கள். ஸ்டாலின் அங்கிள், நீங்கள்தான் என் முகச் சிதைவு நோயை குணமாக்கித் தரவேண்டும்," என்று சிறுமி தான்யா காணொளி வழி கண்ணீர் மல்க கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வும் புதிய பொறுப்பும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

