புதுவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடத்தப்பட்ட பழமையான கலைப்பொருள்கள் உள்ளிட்ட 20 சாமி சிலைகளை புதுச்சேரியை ஒட்டி அமைந்துள்ள தமிழகப் பகுதியான ஆரோவில்லில் இருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.
ஆரோவில் பகுதியில் உள்ள 'ஆரோ ரச்சனா' என்ற கடையில் பழங்காலச் சாமி சிலைகள், மரச் சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், பழமைவாய்ந்த கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்து விநாயகர், முருகன், ஐயப்பன், புத்தர் என கற்கள், உலோகம், மரத்தாலான 20 சிலைகளைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி. தினகரன் கூறுகையில், "தமிழக சிலைகளைப் பிரான்ஸ் நாட்டுக்கு கடத்திச் செல்ல திட்டம் தீட்டியிருந்த நிலையில், பழங்காலச் சிலைகளைப் போல் இருந்ததால் அவற்றை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து சிலைகளையும் கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளோம். விசாரணை நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்


