வனப்பரப்பை உயர்த்த நடவடிக்கை
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் 23.7 விழுக்காடாக உள்ள வனப்பரப்பினை பசுமை இயக்கத்தின் மூலம் 33 விழுக்காடாக அதிகரிக்க 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதாக மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "வனப்பரப்பு அதிகரித்தால் மக்களுக்குத் தூய்மையான காற்று கிடைக்கும். ஆரோக்கியமாக வாழ முடியும்," என்று குறிப்பிட்டார்.
முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை
சென்னை: சென்னை-திருப்பதிக்கு இடையே நேற்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, மக்களின் கோரிக்கையை அடுத்து மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில் மதியம் 1.40 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
பொன்முடி: ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக் கழகத்துக்கும் தமிழகத்தின் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும் இடையே உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி முன்னிலையில் உயா்கல்வி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
''வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவா்கள் கல்வி கற்கவும் வெளிநாட்டு மாணவா்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவும் முடியும். இனிவரும் காலங்களில் பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன," என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை;
பேராசிரியர் பணி இடைநீக்கம்
சென்னை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சதீஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட்டு யோகா விழிப்புணர்வு
கோவை: கோவையில் பொதுமக்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தலைகீழாக நின்றவாறு முதியவர் ஒருவர் இட்லி சாப்பிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் ஆர்.பழனி, 70, கோவையில் உள்ள அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு (சிரசாசனம்) இட்லி சாப்பிட முடிவு செய்தார்.
இதையடுத்து தலைகீழாக நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் திராட்சைப் பழங்கள், பால் குடித்தார். ஆனால், 70 வயதில் இப்படி யோகா செய்துகொண்டே இட்லி சாப்பிட்டால், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது என ஒரு சிலர் அச்சம் தெரிவித்தனர்.

