வேலூர்: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த கொடூரச் சம்பவத்தில் 75 வயது முதியவருக்கு 23 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. அன்வர் பாஷா, 75. இவர் அலுமினியப் பொருள் வியாபாரி.
இவருக்கு தந்தையை இழந்த 13 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை அவ்வப்போது கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற அன்வர் பாஷா பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்த கொடூரம் நீண்டு இருக்கிறது. இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.
கடந்தாண்டு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரை அன்வர் பாஷா பாலியல் பலாத்காரம் செய்தது சிறுமியின் தாயாருக்கு அப்போதுதான் தெரியவந்தது. இதுகுறித்து அவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தில் அன்வர் பாஷாவைக் கைது செய்த காவல்துறையினர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி சி. கலைப்பொன்னி, சிறுமியை கடத்தியதற்காக அன்வர் பாஷாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 'போக்சோ' சட்டத்தின்கீழ் 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அன்வர் பாஷா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

