செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ee3d6cce-0652-4613-8ae6-358dcccc8cff
மூன்று கன்றுகள் ஈன்றுள்ள பசு.படம்: தமிழக ஊடகம் -

'குறைவாக உள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம்'

சென்னை: அரசுப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே படித்து வந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 30க்கு குறைவாகவும் ஊரகப் பகுதிகளில் 15க்கு குறைவாகவும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் படித்து வந்தால், அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கைபேசி வழி தேர்வெழுத உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு கைபேசியில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பைபேசியில் எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வரும் 19 முதல் 30ஆம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இப்படி கைபேசியில் தேர்வு எழுதச் சொல்லி இருப்பது பல பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உணவுப்பொட்டலங்கள் மீது 16 விவரங்கள் இருப்பது கட்டாயம்

சென்னை: உணவுப்பொருள் பொட்டலங்களில் 16 வகையான விவரங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொருளின் மீது உற்பத்தி தேதி, காலாவதி தேதி, சத்துகளின் விவரம், முகவரி, தரச்சான்றிதழ் எண், எந்த நாட்டில் இருந்து பொருள் உற்பத்தியானது உள்ளிட்ட 16 தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. முழுத் தகவல்களையும் குறிப்பிடாத நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்று கன்றுகளை ஈன்ற பசு; மருத்துவர் விளக்கம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மூன்று கன்றுகளை ஈன்ற பசுமாட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். தொட்டப்பநாயக்கனூர் இ.புதுப்பட்டியைச் சேர்ந்த பால்வியாபாரி தமிழ்பாண்டி, 55, என்பவரது பசு மாடு, நேற்று முன்தினம் காலை இரண்டு ஆண், ஒரு பெண் கன்றுகளை ஈன்றது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் மணிகண்டன் கூறுகையில், "ஆயிரக்கணக்கான மாடுகளில் எப்போதாவது ஒன்று இதுபோல அதிசயமாக மூன்று கன்றுகளை ஈன்றெடுக்கும். சிலசமயங்களில் குறைபாடுள்ள கன்றுகள் பிறக்கும். குறைபாடின்றி ஈன்றெடுப்பது எப்போதாவதுதான் நடக்கும், அது இப்போது நடந்துள்ளது," என்றார்.