திமுக முப்பெரும் விழாவில் முன்னோடிகளுக்கு விருது
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டன.
திருமதி சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதையும் கோவை இரா. மோகனுக்கு அண்ணா விருதையும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு கலைஞர் விருதையும் புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதையும் பொற்கிழியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
"எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதே தமிழக அரசின் முக்கிய இலக்கு," என்றும் அவர் கூறினார்.
'ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சிக்கு முயற்சி'
சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக விருதுநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
காவலன் செயலியைப் பயன்படுத்தும்படி வேண்டுகோள்
தஞ்சாவூர்: இணையக் குற்றங்களைத் தடுக்க பெண்களும் பொதுமக்களும் காவலன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் 100% பொருத்தப் பட்டுள்ளன. இதன்மூலம் குற்றங்கள் நடப்பது குறையத் தொடங்கிவிட்டன. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 60 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன," என்றும் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒருவர் தனது காற்சட்டை, இடைவாரில் மறைத்து வைத்திருந்த 580 கிராம் தங்கம் சிக்கியது. 36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னையைச் சேர்ந்த முருகன் கோவிந்தராஜ் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் துபாய் விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, கழிவறையில் கிடந்த பொட்டலத்தில் 220 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.
ராகுலுக்கு ஆதரவாக புதுமணத் தம்பதி நடைப்பயணம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், சியோன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவேல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கும் மாத்தூரைச் சேர்ந்த ஜெனிசா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து மனைவியுடன் நடைப்பயணம் சென்றார். காங்கிரஸ் கொடியுடன் நண்பர்கள், உறவினர்களும் புதுமணத் தம்பதியருடன் நடைப்பயணம் சென்றனர்.

