சென்னை: கடல்நீரில் கால் வைத்து மகிழ்வதற்கான வசதி வாய்ப்புகள் கிடைக்காமல் நீண்ட நாள்களாக தமிழக மாற்றுத் திறனாளிகள் பலரும் வருத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நிரந்தர நடைபாதை அமைக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இப்போது மெரினாவிலும் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளி களுக்கான தனிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெரினாவில் 250 மீட்டர் நீளம், 10 அடி அகலத்தில் நடைபாதையை அமைக்கும் திட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.1 கோடியே 14 லட்சம் செல வில் நடைபெறும் பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்துள்ள நிலை யில், அடுத்த மாதம் இந்த நடை பாதை வசதி பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் இறங்கும் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்படும் நிரந்தர பாதை வசதி மனதுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்து உள்ளனர்.
"எனக்கு 38 வயதாகிவிட்டது. இன்னும் நான் கடலில் கால் வைத்ததில்லை. ஏனெனில், என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல்கள் கடல் மணலுக்குள் புதைந்து சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் கடற்கரை பக்கம் செல்வதில்லை.
"எங்களது ஏக்கத்தைப் போக் கும் வகையில் தனி நடைபாதை வசதி கிடைத்துள்ளது," என தீபக் என்ற மாற்றுத்திறனாளி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிற கடற்கரையிலும் இந்த வசதி செய்து தரப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளி கள் பலரும் கோரியுள்ளனர்.
நடைபாதையில் பாதுகாப்பாக செல்லும் வகையில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கழிவறை வசதிகளும் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

