ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'பிட்காய்ன்' மோசடி தொடர்பாக 12 மணி நேரம் சோதனை நடத்திய காவலர்கள், இருவரைக் கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்தனர்.
ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, 'பிட்காய்ன்' திட்டத் தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்தது.
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகவர்களை நியமித்து இத்திட்டத்துக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டது.
தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களையும் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, வேலூர், மதுரை உள்ளிட்ட இடங்களிலும் முகவர்களை நியமித்து அந்த நிறுவனம் பண வசூலில் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் முதலீடு செய் தவர்களிடம் தாங்கள் சொன்னது சொன்னபடி பணத்தை இரட்டிப்பாக்கித் தராததால், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளரின் வீடு உட்பட எட்டு இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடத்தினர்.
12 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை முடிவுற்றதை அடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரை காவலர்கள் கைதுசெய்தனர்.
அவர்களது கார்கள், சொத்துப் பத்திரங்களைப் பறிமுதல் செய்த காவலர்கள், 'பிட்காய்ன்' மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.20 கோடி வரை அந்த தனியார் நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளதாகவும் நாடு முழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

