கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே 13.5 டன் எடை கொண்ட லாரி ஒன்றைக் கயிற்றால் கட்டி, அதனை 111 மீட்டர் தூரம் வரை இழுத்து 'இரும்பு மனிதர்' என வர்ணிக்கப்படும் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுட்டிவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 40. எம்.ஏ., பட்டதாரியான இவர், ஒரு விளையாட்டுப் பயிற்சியாளரும் ஆவார்.
இவர் ஏற்கெனவே 9.5 டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சாதனை படைத்திருந்த நிலையில், இப்போது தன் பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நாகர்கோயில் அருகே இந்நிகழ்வைக் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
14 சக்கரங்கள் கொண்ட லாரியின் முன்பக்கத்தில் கயிற்றைக் கட்டி அதனை 111 மீட்டர் தூரம் வரை மல்லுக்கட்டி கண்ணன் இழுத்துச்சென்றார்.
இதன்மூலம் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள கண் ணனிடம் அதற்கான சான்றிதழ், வெற்றிக் கிண்ணத்தை உலகச் சாதனை விருது வழங்கும் குழுவினரும் குமரி எம்.பி. விஜய்வசந்த்தும் வழங்கிப் பாராட்டினர்.
"தன் உடல், தசை பலத்தால் பல சாதனைகளையும் கண்ணன் புரிந்துவருகிறார். இப்போது 13.5 டன் எடைகொண்ட லாரியை 4 நிமிடங்களில் கரங்களால் 111 மீட்டர் இழுத்து சாதனை புரிந்துள்ளார். அவரால் தமிழகத்துக்கும் குமரி மாவட்டத்திற்கும் பெருமை," என டுவிட்டர் பதிவில் விஜய்வசந்த் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

