சென்னை: தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் பணிபுரியச் சென்ற 16 பேருக்கு அங்கு சரியான வேலை வழங்கப்படவில்லை.
மாறாக தாங்கள் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருவதாக வெளி யான காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திருப்பெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வபெருந் தகை, பாதிக்கப்பட்டவர்களின் காணொளி, புகைப்படங்கள் குறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளார்.
காணொளிப் புகார் குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப் பட்டுள்ள ஒரு பெண் உள்பட 16 பேரையும் மியன்மாரில் இருந்து உடனடியாக மீட்கவேண்டும் என செல்வபெருந்தகை கோரியுள்ளார்.
தமிழகம், புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் முகவர் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவதற்காக 16 இளையர்கள் துபாய் சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணி இல்லை எனக்கூறி தாய்லாந்து நாட்டிற்கு அவர்களை அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அங்கேயும் பணி இல்லை எனக் கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைக்கழித்துள்ளனர். இப்போது, சட்டவிரோத மாக மியன்மாரில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
அத்துடன், கொடுமையாகத் தாக்கப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக பணி செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வேலையைச் செய்ய விரும்பாதவர்கள் 5,000 அமெரிக்க டாலர் கொடுக்கவேண்டும் என்றும் இல்லையேல், மின்சார அதிர்ச்சி, அடித்தல், உணவு தராமல் இருத்தல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளையர் பகிர்ந்துள்ள காணொளியில், தாங்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும் தங்களைக் காப்பாற்றும்படியும் வேத னையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
"சித்திரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமல்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியம்," என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

