பேருந்து, லாரி ஓட்டுநர்கள் கைது
சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நின்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து மீது மணல் லாரி மோதியதில், மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பேருந்தின் உதவியாளரும் என ஆறு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், லாரி ஓட்டுநர் கார்த்திக், பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திராவின் ஏழு பேர் சிறையில்
ெசன்னை: சென்னை செங்குன்றம் பகுதி அருகே காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஆந்திரப் பதிவெண் கொண்ட இரண்டு கார்களைச் சோதனை செய்தனர். அந்தக் கார்களுக்குள் 200 கிலோ கஞ்சா இருந்தது. கார்களும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். விசாகப்பட்டி னத்தில் இருந்து கஞ்சாவைக் கடத்திவந்தது தெரியவந்தது.
யானை குளிக்க ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம்
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள 19 வயது யானை ஜெயமால்யதாவுக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யானைப் பாகன்கள் கூறுகையில், ''புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு பிள்ளைபோல் அங்கும், இங்கும் சென்று தண்ணீரை துதிக்கையால் வாரி இறைத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது,'' என்றனர்.
காதல் திருமணம் செய்த இளைஞர் மருத்துவமனையில்
திருப்பத்தூர்: இன்னும் திருமண வயதை எட்டாத 'மைனர்' பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இளையர் ஒருவர், காவலர்கள் தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள தீக்குளித்தார். இதனால், பலத்த தீக் காயம் அடைந்த இளையர், ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் போடி என்கிற திருநாவுக்கரசு, 21. கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் தாய் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

