குன்றத்தூர்: நண்பர்கள் இருவர் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் நின்று செல்ஃபி எடுத்தபோது, ஏரிக்குள் தவறி விழுந்து உயிரி ழந்தனர்.
இளையர்களின் உடல் குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து குன் றத்தூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. கார் பழுதுபார்ப்பவராக பணிபுரிந்து வந்தார்.
இவரது நண்பர் ரிச்சர்ட், 16. அதேபகுதியில் வசித்து வந்த ரிச்சர்ட் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஏரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த மதகின் மீது நின்றபடி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க போராடிய போதிலும் அவர்களால் முடியவில்லை.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடல்களையும் மீட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கும்போதும் செல்ஃபி எடுக்கும்போதும் உயிர்ப் பலி ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செம்பரம்பாக்கம் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

