செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7453db9f-7fa3-4a89-a4ba-21d42f2bbb13
-

கும்மிடிப்பூண்டி செல்லும் சசிகலா

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக அவரது சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றவும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டவும், பெண் இனத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும் சசிகலா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பல்கலைக்கழகத்தை

நிறுவிய முதல் மாநிலம்

சென்னை: இந்தியாவிலேயே சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம்தான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை பெருங்குடியில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.

"கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. வழக்கறிஞர்கள் தங்கள் வாதத் திறமையை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்க, பல்வேறு சீரிய திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறோம். இலவச பயணச்சீட்டு சலுகை மாணவியருக்கு பெரும் உதவியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆ.ராசாவுக்கு கண்டனம்;

நீலகிரியில் கடையடைப்பு

நீலகிரி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்து முன்னணியினர் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, நேற்று காலை நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 80 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடையடைப்புப் போராட்டத்தையொட்டி நீலகிரி எஸ்.பி. ஆசிஷ் ராவத் உத்தரவின் கீழ் அசம்பாவிதங்களை தடுக்க 500க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நூறு விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டன.