செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a322b68c-4877-4299-b363-05ca2c9bc20b
-

சேடப்பட்டி முத்தையா காலமானார்

மதுரை: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, 76, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று காலமானார். 1991 முதல் 1996 வரை தமிழக சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தவர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டது. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்த அவர், சேடப்பட்டி சட்டசபைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றதால் 'சேடப்பட்டியார்' என அழைக்கப்பட்டார்.

எட்டு மீனவர்கள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தமிழ்ச்செல்வன், 37, என்பவர், தன் விசைப்படகில் விஜி, 28, தினேஷ், 26, ரஞ்சித், 27, பக்கிரிசாமி, 45, கமல், 25, புனுகு, 41, கார்த்திக், 27, ஆகியோருடன் மீன்பிடிக்கச் சென்றார்.

நேற்று அதிகாலை நேரத்தில் இந்த மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக கப்பலில் சுற்றுக்காவல் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்து எட்டு மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து காரை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சூரியின் உணவகங்களில் சோதனை

மதுரை: நகைச்சுவை நடிகர் 'பரோட்டா' சூரிக்கு மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இவரது உணவகங்களில் பொருள் சேவை வரி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவுப்பொருள்களுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, இந்தப் புகார்கள் தொடர்பாக மூன்று நாள்களுக்குள் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மதுரை மண்டல வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

சிவகாசி: சிவகாசி அருகே ஐந்தாம் வகுப்பில் படித்து வந்த 10 வயது சிறுமி ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பிணமாகக் கிடந்தார். சந்தேக நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

சிவகாசியில் நூல் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த மஜாம் அலிதான் கொலையாளி என்பதை காவலர்கள் கண்டுபிடித்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி, கடத்தல், கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தது. மஜாம் அலி சாகும்வரை சிறை வாசம் அனுபவிக்க நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

ரயில், விமானக் கட்டணம் உயர்வு

கோவை: தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் ரயில், விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சாதாரண நாள்களில் 5,000 முதல் 6,000 ரூபாய் வரை இருக்கும் விமானக் கட்டணம், பண்டிகைகள் வருவதற்கு முன்பே 13,000 முதல் 15,000 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட உள்நாட்டு விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல், முக்கிய நகரங்களுக்கான ரயில் கட்டணங்களும் உயர்ந்து, டிக்கெட்டுகளைப் பெறமுடியாத சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.