மதுராந்தகம்: காணொளி வழியாக மருத்துவர் ஒருவரின் அறிவுரை யைக் கேட்டு தாதியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது.
மதுராந்தகம் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் தாதியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலுவை உடனடியாக பணியிட மாற்றம் செய்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தாதியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த செய்தி அந்தப் பகுதியில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, கிராம மக்களும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் காவல் அதி காரிகள் உள்ளிட்டோர், "தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆண்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 36. மின்சார ஆய்வாள ரான இவரது மனைவி புஷ்பா, 33. நிறைமாத கர்ப்பிணி.
நேற்று முன்தினம் புஷ்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர் மருத்துவ முகாமுக்குச் சென்றிருந்த நிலையில், பிரசவ வலியால் துடித்த புஷ்பாவுக்கு மருத்துவர் இன்றி தாதியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
மற்றொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவரைக் காணொளி வழி தொடர்புகொண்டு அவர் கூறிய அறிவுரையின்படி தாதிகள் பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், குழந்தையின் கால் பகுதி முதலில் வெளியே வரவே தாதியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

