சென்னை: தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கொவிட்-19, டெங்கி, எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், இவற்றைத் தடுக்கும் வகையில் 1,000 இடங்களில் நேற்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சளி, தலைவலி, இருமல், காய்ச்சல் இப்படி எந்த அறிகுறிகள் இருந்தாலும் முகாம்களில் பரிசோதித்துக் கொள்ளும்படியும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொவிட் பாதிப்பு மக்களைப் பாடாய்ப்படுத்தி வந்த நிலையில், இப்போது டெங்கி, எச்1என்1 காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சலுக்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொவிட்-19 கிருமித்தொற்றால் 500 பேர் என்ற அளவில் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் எச்1என்1 என்ற 'இன்ஃப்ளுயன்சா வைரஸ்' வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் காரணமாகவும் தினமும் 200க்கும் மேலானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ முகாம் களைத் தமிழக அரசு நேற்று முதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோலப்பஞ்சேரியில் காய்ச்சல் தடுப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 1,166 பேர் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தற்போது 371 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 10 மாதங்களில் 10 பேர் இக்காய்ச்சலால் இறந்துள்ளனர்," என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "பருவ கால மாற்றம் ஏற்படும்போது டெங்கி, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது இயல்பானதே.
"கொரோனாவுடன், சாதாரண காய்ச்சல், டெங்கி, பன்றிக்காய்ச்சலும் இருப்பதால் பரவல் அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது.
"மொத்தமுள்ள எட்டு கோடி தமிழக மக்களில் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம், சொந்தமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்," என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

