கோவை: குடிநீர் குழாய் பதிப்பதற் காக தோண்டப்பட்ட குழிக்குள் தனியார் பேருந்து ஒன்று நேற்று சிக்கிக்கொண்டதால் கோவை மாவட்டத்தில் உள்ள இடையார்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரையிலான பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இதற்காக முக்கிய நெடுஞ்சாலையான தடாகம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால், அங்கு குழிகள் இருப்பதற்கான எந்தவிதமான அறிவிப்பும் அங்கு வைக்கப்படவில்லை.
இது தெரியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக குழிக்குள் சிக்கிக்கொண்டதை அடுத்து, அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை பாரந்தூக்கி மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக இச்சாலை மோசமாக சேதமடைந்திருந்த நிலையில், தற்போது குடிநீர் குழாய் பணிகளும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

