சங்கு குளிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கு குளித்தல் தொழில் செய்துவரும் நிலையில், இதனைக் கண்டித்து 3,000 மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
"தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளாக முத்துகுளித்தல் தொழில் செய்துவந்தோம். இப்போது, சங்கு குளித்தல் தொழிலில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகிறோம். இத்தொழிலில் வெளிமாவட்டத்தினரை ஈடுபடுத்துவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படு கிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை," என சங்குகுளிக்கும் மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடல்பசுவுக்கு காப்பகம் அமைத்தது தமிழக அரசு
தஞ்சாவூர்: கடல் புல்களை உண்டு வாழும் பாலூட்டி இனமான கடல் பசுக்கள் இந்திய அளவில் அருகி வரும் நிலையில், இந்தக் கடல்பசு இனத்தையும் அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க தமிழக அரசு கடல்பசு காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் கடல்பசு காப்பகமாகும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் உள்ள 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, கடற்பசு காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்றும் அதேவேளையில் கடல்பசுவைக் காக்கவும் இனப்பெருக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து குற்றவாளிகளை ஊருக்குள் நுழையத் தடை விதித்த நீதிபதி
தென்காசி: தென்காசி பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அருகில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கச் சென்றனர். ஊர் கட்டுப்பாடு எனக்கூறி கடைக்காரர் மிட்டாய் வழங்க மறுத்தார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கடையை மூடி முத்திரை வைத்தனர். கடை உரிமையாளர் மகேஷ்வரன், ராமசந்திரமூர்த்தி கைது செய்யப்பட்டனர்.
தீண்டாமைக்கு காரணமாக இருந்த குமார், சுதா, முருகன் ஆகிய மூவரில், குமார் நேற்று கைதானார். சுதா, முருகன் தலைமறைவாகிவிட்டனர். நெல்லை வன்கொடு மைத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் ஐவரும் ஆறு மாதம் ஊருக்குள் நுழையத் தடைவிதித்து நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.

