மாணவி மரணம் தொடர்பில் 36 யூடியூப் ஒளிவழிகள் மீது நடவடிக்கை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தொடர்பில் 36 யூடியூப் ஒளிவழிகள்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் பொய்யான தகவலகளைப் பரப்பியதாக, நான்கு பிரிவுகளின்கீழ் இணையக் குற்றத்துக்கு எதிரான காவல் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் 6 யூடியூப் ஒளிவழிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து யானை பலி
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பஞ்சுரா தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை ஒன்று உயிரிழந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு உணவுதேடி வந்த யானை அந்தத் தோட்டத்தில் இருந்த பாக்கு மரங்களை முறித்து சாய்த்தபோது பாக்குமரம் உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதாக நம்பப்படுகிறது. அதனால் மின்கம்பி அறுந்து, மின்சாரம் பாய்ந்து யானை இறந்திருக்கக்கூடும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தஞ்சாவூர் கோயில் சிலை அமெரிக்க ஏல மையத்தில் கண்டுபிடிப்பு
ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிக்கு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் இருக்கிறது காசி விஸ்வநாதர் ஆலயம். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 82.3 செ.மீ. உயரமுள்ள காலசம்ஹார மூர்த்தி சிலை 50 ஆண்டுகளுக்கு முன்னர் களவுபோனது. இந்தச் சிலை அமெரிக்காவின் கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைத் திருமணம்: தந்தை கைது
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிபுரியும் தீட்சிதர் ஒருவர் தனது 15 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாக கடலூர் சமூகநலத்துறை அதிகாரிகள் புகாரளித்தனர். சென்ற ஆண்டு இந்தத் திருமணம் நடந்தது காவல்துறையின் விசாரணையில் உறுதியானதையடுத்து தீட்சிதர் கைது செய்யப்பட்டார். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊருக்குள் புகுந்த கரடி சிக்கியது
களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடந்த ஒரு வாரமாக மூன்று கரடிகள் ஊருக்குள் புகுந்து தொல்லை செய்துவந்தன. இரவு நேரங்களில் தொல்லை தந்த கரடிகளைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். அதில் ஐந்து வயதான ஆண் கரடி நேற்று சிக்கியது. அதை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகக் கொண்டுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

