சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதோட சட்ட மன்றத் தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளதால் திமுக ஆட்சிக்கு இன்னும் 44 அமாவாசைகளே பாக்கியிருக்கு என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது.
அவருக்கு மாபெரும் மாலை அணிவித்து நிர்வாகிகள் வரவேற்றனர்.
"பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் விழா நடத்த தகுதியான இயக்கம் அதிமுக மட்டும்தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவர் எதிலெல்லாம் அக்கறை செலுத்தினாரோ அந்த வழியில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்து சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள், நன்மைகளை ஜெயலலிதா நிறைவேற்றினார். நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் மறைவிற்குப் பின்னரும் மக்களின் மனதில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்" என்று பழனிசாமி குறிப்பிட்டார்.
"முதலமைச்சராக நான் இருந்தபோது, அதிகமான போராட்டங்களை சந்தித்தேன். யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை.
"தற்போது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்திற்கே திமுக ஆட்சி பயந்து விட்டது. மின்கட்டண உயர்வு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் ஸ்டாலின்.
"தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஓர் அமைச்சரை போட்டிருக்கிறார்கள். எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை. 44 அமாவாசைகள்தான் திமுக ஆட்சிக்கு அவகாசம் உள்ளது. அதுகூட நடக்காது. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது.
"என்னை டெம்பரரி தலைவர் என்கின்றனர். கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின்தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறைசொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது," என்று பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

