புதுடெல்லி: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய அரசு அறி வுறுத்தியுள்ளது.
அண்மையில் வெறுப்புணர்வுத் தாக்குதல், இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கு அதிகரித்துள்ளன.
இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள தூதரகங்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் அமைச்சு அனுப்பியுள்ளது.
வெறுப்புணர்வுத் தாக்குதல் சம்பவங்களை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படாததையும் அது சுட்டிக்காட்டியது. "குற்றச்செயல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்தியாவிலிருந்து சுற்றுலா அல்லது கல்விக்காக கனடா செல்லும், சென்றுள்ள இந்தியர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்," என்று சுற்றறிக்கை தெரிவித்தது.
இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களை ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவர் இந்திய தூதரகங்களில் பதிவு செய்ய அரசாங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இந்திய உயர் ஆணையரகம் மற்றும் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் தொடர்பில் இருப்பதையும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்களை அணுகுவதையும் இது எளிதாக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

