பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்

1 mins read
8e17e142-5d8f-4324-8f9b-f3bbb7340587
-

சென்னை: இயற்கையை மனிதர்களால் உருவாக்க முடியாது என்றாலும், இயற்கையை காக்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த அவர், ஒவ்வொருவரும் மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும். இயற்கையைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும். இயற்கையைக் காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு மரங்கள் நடப்பட்டுள்ளன.

"இயற்கையைக் காப்பது என்பது நமது பிறப்பிலேயே உள்ளது. அரசும் ஆட்சியும் மட்டுமே இயற்கையைக் காக்க முடியாது; மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நாட்டு மரங்களை நடுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

பசுமை தமிழகம் இயக்கத்தை வெற்றி பெறச் செய்வது மக்கள் கையில்தான் உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 33 விழுக்காடு பசுமைப் போர்வை எனும் தமிழக அரசின் இலக்கை பத்தாண்டுகளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.