செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
439dafcc-caf9-4fd3-81c3-22552af6c95f
-

மதுரை புத்தகத் திருவிழாவில் மக்கள் மனம் கவர்ந்த புத்தகச் சிற்பம்

மதுரை: 'ஆண்டுதோறும் களைகட்டும் மதுரை புத்தகத் திருவிழா, நேற்று முன்தினம் விமரிசையாகத் தொடங்கி உள்ளது. புத்தகத் திருவிழாவுக்கு வருவோரை வரவேற்கும் வகையில் விழா நடைபெறும் திடலின் நுழைவு வாயிலில் தமிழ் காப்பிய நூல்களை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர பிரம்மாண்ட 'புத்தக சிற்பம்' அமைக்கப்பட்டுள்ளது. குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற தமிழ் காப்பிய, இலக்கண நூல்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்து, அதன்மேல் இரு குழந்தைகள் திருக்குறள் புத்தகம் படிப்பதுபோன்று அச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டா மாறுதலுக்கு இணையம் வழி விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இனி பட்டா மாறுதலுக்கு இணையம் வழி விண்ணப்பிக்கலாம் எனப் பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பட்டா உத்தரவின் நகல்களைக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி, நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட அன்புமணி வலியுறுத்து

சென்னை: சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளைக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பதை ஏற்க இயலாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.