சென்னை: கடந்த சில மாதங்களாக சென்னையில் வீட்டு வாடகை கணிசமாக அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு, பொதுமக்கள் இயல்புநிலைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதிலும் பல்வேறு சிரமங்கள் நிலவுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த ஏராளமானோர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். மேலும், பலர் ஊதியம் குறைக்கப்பட்டதால் பொருளியல் நெருக்கடிக்கு ஆட்பட்டு குறைந்த வாடகை உள்ள வீடுகளுக்கு மாறினர்.
தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்தவர்கள், இரண்டு அல்லது மூன்று நண்பர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும் முறைக்கு மாறினர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுப்பரவல் குறைந்ததை அடுத்து, அனைத்து வர்த்தக, தொழில், சமூக நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முழு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு அண்மையில் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
இதனால் பெரும்பாலோருக்கு அதிக பாதிப்பு இருக்காது என்று அரசுத் தரப்பில் சமாதானம் கூறப்பட்ட நிலையில், வாடகைக்கு குடியிருப்போருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக வீட்டு உரிமையாளர்கள் வாடகையை கணிசமாக உயர்த்தி வருகின்றனர்.
குறைந்தபட்சம், பத்து முதல் இருபது விழுக்காடு வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.
அண்ணா நகர் உள்ளிட்ட வசதி படைத்தோர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் சாதாரண வீடுகள் முதற்கொண்டு பங்களா வீடுகள் வரை அனைத்துக்கும் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
வாடகை உயர்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களும் வாடகை செலுத்த முடியாதவர்களும் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
இதேபோல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் வாடகை உயர்வு நடுத்தர, ஏழை மக்களை வாட்டத் தொடங்கி உள்ளது.

