மதுரை: போலி கடப்பிதழ் முறைகேட்டில் 41 பேருக்குத் தொடர்பு உள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரையில் ஏராளமானவர்களுக்கு போலி கடப்பிதழ் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருக கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அனைத்து போலி கடப்பிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த முறைகேட்டில் காவல்துறை உயரதிகாரிக்குத் தொடர்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியதை அடுத்து, இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, ஜூன் மாதத்துக்குள் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 53 போலி கடப்பிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் இதற்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் வழக்கறிஞர் முருக கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேட்டின் மூலம் இலங்கை அகதிகள் பலர் கடப்பிதழ் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலி கடப்பிதழ் முறைகேட்டில் 41 பேருக்குத் தொடர்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

