சென்னை: வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி உள்ளது தமிழக அரசு.
தொடக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதை முழக்கமாக கொண்ட திமுக அரசுக்கு தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதல் கடமை என்று குறிப்பிட்டார்.
"பல நூறு ஆண்டுகளாக தமிழின் சொத்துகள் சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய்விட்டன. அந்தத் தவறு தடுக்கப்பட்டு இன்று தொகுத்தும் சேகரித்தும் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியும் வைத்திருக்கிறோம்.
"தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டு உள்ளது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழர்கள் உணர்வால், உள்ளத்தால், தமிழால் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மொழிக்கு மட்டுமே அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்றார்.
மேலும், மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது என்றும் தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்கின்ற உயரிய நோக்கத்துடன் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழின் புகழ் பாடும் கழகம் அல்ல என்றும் பேசிக் கழிக்கும் கழகம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
"தமிழ் பரப்புரைக் கழகத்தின் மூலமாக 22 நாடுகள், 20 மாநிலங்களைச் சார்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் முதல் கட்டமாக பயனடைய இருக்கிறார்கள். இதனை மேலும் உலகம் முழுவதும் வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான அயலகத் தமிழ் மாணவர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய பணியை தமிழ் இணைய கல்விக்கழகம் மூலமாக தமிழக அரசு மேற்கொள்ளும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் வளர்ச்சித்துறைக்கும் ரூ.82 கோடி ஒதுக்கி பல்வேறு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விழாவின்போது அயலக மாணவர்கள் தமிழ் கற்பதற்காக 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாடப்புத்தகங்களையும் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான மேலாண்மைச் செயலி, துணைக் கருவிகளையும் அவர் வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

