சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என எச்சரிக்கப்படுகிறது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அச்சமயம் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அமைப்பு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட ஆள் சேர்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறையும் இந்த அமைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இஸ்லாமிய மத அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் குறிவைத்தும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த சில தினங்களாக இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தலைமைச் செயலர், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவிடம் அக்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜக, அதன் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ள அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
வகுப்புவாத சக்திகளுக்குத் துணைபோகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவுலானா முகமது மன்சூர் காஸிமி, சோதனை என்ற பெயரில் தேசியப் புலனாய்வு முகமை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

