கோவை: கடந்த சில தினங்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அதிவீர பாண்டியன் தெரிவித்தள்ளார்.
ரயில் பயணத்தின்போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு வரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
"மாணவர்களது வாழ்க்கை அவரவர் கைகளில்தான் உள்ளது. காணொளிப் பதிவுகளுக்காக ரயில் கூரைகள் மேல் ஏறுவது, ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, கத்தி, அரிவாள் போன்ற பொருள்களைக் கொண்டு நடைமேடைகளில் விபரீத சாகசம் செய்வது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் சட்டப்படி குற்றம்," என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிவீர பாண்டியன் தெரிவித்தார்.
பெற்றோர் பாடுபட்டு படிக்க வைப்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஆலோசனை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களைக் கொண்டு செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்தேகத்துக்குரிய பயணிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதிவீர பாண்டியன் மேலும் தெரிவித்தார்.