ஈரோடு: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இது வரை 15 பேர் சிறையில் அடைக் கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மாநிலம் முழுவதும் கேன்களிலும் போத்தல்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளை வைத்து பல பேரிடமும் விசாரணை நடத்தப் பட்டு வரும் நிலையில், மக்களிடம் அச்சமும் பதற்றமும் நிலவுவதால் தென் மண்டலங்களில் 20,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெண் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் கூறியுள்ளார்.
கடந்த 22ஆம் தேதி கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடுகள், கடைகள் என பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு என அடுத்தடுத்து ஒன்பது இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து, மேற்கு மண்டலம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஈரோட்டில் பாஜக பிரமுகர் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள தாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில அரசியல் தலைவர்கள், கலவரங்களைத் தூண்டிவிடும் மதவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று அரசை வலியுத்தி உள்ளனர்.
"காவல்துறையினர் ஆங்காங்கே கைது நடவடிக்கையை முடுக்கிவிடத் துவங்கி உள்ளனர். இதனை கூடுதல் வேகத்துடன் செய்யவேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த குற்றங்களைத் தடுக்கமுடியும்," என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இருக்கலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
"தமிழ்நாட்டில் பத்து மாவட் டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. இந்தக் கலாசாரத்துக்கு அரசு விரைந்து முடிவுகட்ட வேண்டும்," என பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளார்.
"ஒரே சமயத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந் திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பாா்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டாா்கள்.
"அமைதிப் பூங்கா என்று பெய ரெடுத்த தமிழகத்தை வெடிகுண்டு கலவரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்," என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

