திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில், பல வீடுகளிலும் பணிப்பெண்ணாக வேலை பார்த்து சொற்ப சம்பளம் ஈட்டும் மாசி லாமணி என்ற பெண் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர், தன் மகளுக்கும் பயிற்சி அளித்து வெண்கலப் பதக்கத்தை வெல்ல வைத்துள்ளார்.
தாய் மாசிலாமணி 63 கிலோ எடைப் பிரிவில் தங்கத்தையும் மகள் தாரணி 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலத்தையும் வென்றுள்ளனர்.
கோவை மாவட்டம், குணிய முத்தூரைச் சார்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாசிலாமணி, மகள் தாரணி. 11ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
மாசிலாமணி, கோவைப் புதூரில் உள்ள சில வீடுகளில் மாதம் ரூ.4,000க்கு வீட்டு வேலை செய்து வரும் நிலையில், உடல் பருமனாக இருப்பதால், உடற்பயிற்சி செய்யும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு இடையே மாசிலாமணி உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு மற்றவர்கள் எடை தூக்கு வதைப் பார்த்து ஆர்வம் கொண்ட வர், தானும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளரும், தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்றவரும், பயிற்றுவிப்பாளருமான சிவக்குமார், மாசிலாமணிக்கு இலவசமாகப் பயிற்சி அளித்துள்ளார்.
தாயைப் பார்த்து தாரணியும் பயிற்சியில் ஈடுபட்டார்.
கடும் பயிற்சியின் பலனாக திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி யில் தாயும் மகளும் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தாரணி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.