செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f3e796e2-2ace-4a8b-9204-5d4b939e9023
-

எச்1என்1 காய்ச்சல் நோயாளிகள் முகக்கவசம் அணிவது அவசியம்

சென்னை: 'இன்ஃப்ளுயன்சா' என்ற எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தங்கள் நலனில் மட்டுமன்றி, மற்றவர்கள் நலனிலும் அக்கறை காட்டவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்தக் காய்ச்சலால் 465 பேரும் டெங்கி பாதிப்பால் 352 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பு நாளொன்றுக்கு 400 முதல் 500 என்ற அளவிலேயே இருந்து வருவதால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்தடுத்து 15 கடைகளில் திருட்டு

ஊட்டி: ஊட்டி நகராட்சி தினசரி சந்தையில் 1,700 கடைகள் உள்ள நிலையில், அவை அதிகாலை முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

வழக்கம்போல் கடையைத் திறக்க நேற்று முன்தினம் காலை நேரத்தில் வியாபாரிகள் வந்தபோது, வரிசையாக 15 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

லட்சக்கணக்கில் பணம் களவாடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, முகமூடி பேர்வழி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. குற்றவாளியைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.

கார் விபத்து: மூவர் உயிரிழப்பு;

பேருந்து விபத்து: 40 பேர் காயம்

விபத்தில் சிக்கி தலைகுப்புற விழுந்து கிடக்கும் கார். படம்: ஊடகம்

விழுப்புரம்: ஏஜாஸ் என்பவருக்கு குழந்தை பிறந்திருந்த நிலையில், குழந்தையைப் பார்ப்பதற்காக சேலம் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் அவர் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது.

உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தடுப்புச் சுவரில் மோதிய கார், 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் சிறுமி உள்பட மூவர் உயிரிழந்தனர்.

விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஏஜாஸின் தாய் ஹமீம், தங்கை அம்ரின், மகள் சுபேதா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே, திண்டிவனம் அடுத்த நெடி, மோழியனூரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று திண்டிவனம் நோக்கிச் சென்றது. அய்யனார், 35, என்பவர் பேருந்தை ஓட்டிச் செல்ல, ரவி, 45, நடத்துநராக பணியில் இருந்தார். ஆலகிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் சாய்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.