சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா ஆளுநரும் யூனியன் பிரதேசமான புதுவையின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா நகரில் வீடு வழங்கப் பட்டிருக்கிறது.
தனக்கு அரசின் சார்பில் வீடு வழங்கவேண்டும் என்று குமரி அனந்தன் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வீடு வழங்குவதற்கான ஆணையை தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பெருந்தலைவர் காமராஜரின் சீடர். காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர். மக்கள் நலனுக்காக 17 முறை மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் பெருமை சேர்த்து வரும் குமரி அனந்தன் தான் வாழ்வதற்கு வசதியாக அரசின் சார்பில் வீடு வழங்கிடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, சென்னை அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

