சென்னை: இணைய ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற வுடன் இந்த அவசரச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என உள்துறைச் செயலர் பணீந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் இணைய ரம்மி சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் அதிகரித்து வந்த நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யும் படி பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இணையவழி சூதாட்டங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக, புதிய சட்டத்தை இயற்றும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.
மருத்துவர்கள், உளவியலாளர், காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஜூன் மாதம் அரசிடம் அறிக்கை ஒன்றை அளித்த நிலையில், பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதையடுத்து, சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் இணைய ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரம்மி தடைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதலை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
"தமிழகத்தில் இணைய சூதாட்டம் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில், அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ள தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறேன்," என டுவிட்டர் பதிவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

