வேலைவாய்ப்புக்காக
காத்திருக்கும் 73 லட்சம் பேர்
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்புகள் என ஒவ்வொரு படிப்பையும் முடித்துவிட்டு வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுக்கான வேலைகள் கிடைப்பதற்காக பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்பு, பதிவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து
சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூண்கள் அமைப்பதற்காக கனரக உலோகக் கம்பிகள் கட்டுமானத் தளத்தில் இருந்த பாரந்தூக்கி மூலம் தூக்கப்பட்டபோது கம்பிகளுடன் சேர்ந்து பாரந்தூக்கியும் கவிழ்ந்தது.
ஆலந்தூர் பணிமனைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது இரும்புக் கம்பிகள் சரிந்ததில், அரசுப் பேருந்தின் ஒரு பகுதி அப்பளம்போல நொறுங்கியது.
விபத்தில் பேருந்து ஓட்டுநர்களான அய்யாதுரை, பூபாலன், பாரந்தூக்கியை இயக்கிய ரஞ்சித் ஆகியோர் பலத்த காயமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோயம்பேடு போக்கு வரத்துக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்
சென்னை: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களுக்குள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
பழம்பெரும் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மருத்துவமனையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அனுமதி
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் டெங்கிக் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளம்பெண் பிடிபட்டார்
ராமநாதபுரம்: பரமக்குடியில் அம்சவல்லி, 75, என்ற மூதாட்டியிடம் சங்கிலி பறித்த அருணா, 30, என்ற பெண் கைது செய்யப்பட்டார். அம்சவல்லியிடம் பேசிக்கொண்டே அவரது கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை அருணா கழற்ற முயன்றபோது, அம்சவல்லி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வர சங்கிலி தப்பியது. அருணாவிடம் காவலர்கள் விசாரணை செய்தனர்.

