செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் சுற்றுலா தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.
தமிழக கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அப்பயணிகளுக்கு நெற்றியில் திலகமிட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணி ஒருவர் கரகாட்டம் ஆட விரும்பியதை அடுத்து, அவருக்கும் (படம்) வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தன் தலையில் கரகம் வைத்து உள்ளூர் கரகாட்டக் குழுவினருடன் இணைந்து அவரும் இசைக்கேற்ப ஆடி மகிழ்ந்தார்.
இந்நிலையில், மேலும் சில பயணிகளும் கரகாட்டம் ஆடி உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா தின விழாவில் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.

