சென்னை: மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இப்புதிய நடைமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் இனி பதிவு அலுவலருக்கு வழங்கப்படும்.
இதுவரை எந்த உயர் அலுவலருக்கும் இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே மோசடி ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலையே இருந்து வந்தது.
இதையடுத்து, இந்த நிலை மாற முக்கிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
சட்டத்திருத்தம் மூலம் ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க தமிழக சட்டப்பேரவையில், 2021ஆம் ஆண்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இனி நில அபகரிப்பு அல்லது மோசடி ஆவணங்கள் மூலம் பதிவு நடந்திருக்கும் பட்சத்தில், மாவட்ட பதிவாளர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக புகார் அளிக்க முடியும்.
மனுதாரர், எதிர் மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தை ரத்து செய்து மாவட்டப் பதிவாளர் உத்தரவிடலாம்.
இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
"இதன்மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இவ்வாறு பாதிக்கப்பட்டட ஐந்து பேர் அளித்த புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து அவை மீட்கப்பட்டன.
"மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆவணங்களை முதல்வர் வழங்கினார்," என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

