தீண்டாமைக் கொடுமை: அமைச்சர் மீது காவல்துறையில் புகார்
சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமைச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் சமுதாய மக்கள் சார்பாக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மனு அளிக்கச் சென்றபோது, தங்களை இருக்கையில் அமர வைக்காமல், ஒருமையில் பேசியதாக வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரை நெருங்கி மனுவில் உள்ள விவரங்களை விவரிக்க முயன்றபோது, தம்மைத் தள்ளி நிற்குமாறு அவர் கூறியது, தீண்டாமைச் செயல் என்று குறிப்பிட்டுள்ள இரணியன், அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பாதுகாப்பான சென்னையை உருவாக்க பெண்களிடம் கருத்துக்கேட்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற மூவாயிரம் பெண்களிடம் கருத்துக் கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 2018ஆம் ஆண்டு 729 குற்றங்களும் 2020ஆம் ஆண்டு 576 குற்றங்களும் 2021ஆம் ஆண்டு 874 குற்றங்களும் பதிவாகி உள்ளன. இதையடுத்து, சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட மூவாயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் மூலம் சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் 4,000 காவலர்கள்
சென்னை: 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சென்னையில் அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னை முழுவதும் சுமார் நான்காயிரம் காவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் தியாகராய நகர் பகுதியில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வைகோ: சில வன்முறைகளை வைத்து பிஎஃப்ஐ மீது குறைகூறக்கூடாது
சென்னை: மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பு காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலன் கருதி பல்வேறு தொண்டூழியப் பணிகளை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சில இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி, அந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டப்படுவதாக வைகோ கூறியுள்ளார்.
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல்களுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று மாலை சென்னையில் சில இடங்களிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.

