திருப்பெரும்புதூர்: காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிக்கமுயன்ற ரவுடி சச்சினை, அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு காவலர்கள் பிடித்தனர்.
பலத்த காயமடைந்த சச்சினுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள எருமையூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின், 29. இவர்மீது, கொள்ளை, கொலை முயற்சி, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாக இருந்த சச்சின் நடுவீரப்பட்டு அருகே ஒரு காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவ லர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அங்கு காவலர்கள் சென்றனர். இதனைப் பார்த்துவிட்ட சச்சின் காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். அந்த வெடிகுண்டு வெடிக்காததால் காவலர்கள் உயிர் தப்பினர். அங்கிருந்து தப்பியோட முயன்ற சச்சினையும் அவரது நண்பர் பரத்தையும், 28, காவலர் பாஸ்கர் மடக்கிப் பிடித்தார்.
அப்போது சச்சின் தான் வைத்திருந்த கத்தியால் காவலர் பாஸ்கரைக் குத்திவிட்டு தப்பினார். பாதுகாப்புக்காக காவல் ஆய்வாளர் சிவகுமார், தன் துப்பாக்கியால் சச்சினை நோக்கி இரண்டுமுறை அவரது முட்டி, தொடைப் பகுதியில் சுட்டார்.
குண்டடிபட்டு விழுந்த சச்சினைப் பார்த்து அவரது கூட்டாளி பரத் அங்கிருந்து தப்பினார்.
காவலர் பாஸ்கர், ரவுடி சச்சின் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

